குழந்தைகள் உரிமையைக் காக்க வேண்டும்: நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல்!
Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (19:18 IST)
குழந்தைகள் தங்களுக்கு உள்ள உரிமைகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு இயக்கம் நடத்த வேண்டும் என்று மாவட்ட நீதிபதிகளை தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நமது நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:
வருகிற 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று பள்ளிகள், விடுதிகள், அனாதை விடுதிகள், கண்காணிப்பு இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள குழந்தைகளை நேரில் சென்று சந்திக்க வேண்டும். அந்தக் குழந்தைகளின் நண்பர்கள், உள்ளூர் பிரமுகர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
தாங்கள் யார், தாங்கள் எங்கு வசிக்கிறோம், தங்களின் பெற்றோர் என்ன செய்கிறார்கள், தாங்கள் பேசும் மொழி என்ன, தாங்கள் சார்ந்திருக்கும் மதம் என்ன, தாங்கள் ஆணா பெண்ணா, தங்களின் கலாச்சாரம் என்ன, தங்களிடம் ஊனம் உள்ளதா, தாங்கள் ஏழையா, பணக்காரரா என்பன உள்ளிட்ட எல்லா அடிப்படைத் தகவல்களையும் அறியும் உரிமை குழந்தைகளுக்கு உள்ளது என்று ஐ.நா. குழந்தைகள் உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.
இவற்றைப் பின்பற்றி நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதில் எதைக் காட்டியும் எந்தக் குழந்தையையும் ஒதுக்கிவிடக் கூடாது. குழந்தைகள் தினத்தை அதிக அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும்.
ஒவ்வெரு குழந்தைக்கும் தனது கருத்தைக் கூற உரிமை உள்ளது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெரியவர்கள், குழந்தைகளின் கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனதாலும், உடலாலும் தவறாகக் கையாளப்படுதல், துன்புறுத்தப்படுதல் ஆகியவற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள குழந்தைகளுக்கு உரிமை உள்ளது. இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் முழுமையான வாழ்க்கை வாழ்வதற்காக சிறப்புக் கல்வி கற்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.
இதற்கெல்லாம் மேலாக, குடிப்பதற்கு பாதுகாப்பான குடிநீர், சத்துள்ள உணவு, சுத்தமான பாதுகாப்பான சூழ்நிலை, நலமுடன் வாழ்வதற்கான தகவல்கள், சிறந்த மருத்துவ வசதி ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமை ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ளது.
இவற்றை அரசிடம் பெற்றுக் கொள்வதற்கான உரிமை தேவைப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு உள்ளது. உணவு, உடை, பாதுகாப்பான இருப்பிடம் ஆகியவற்றுடன் அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கான உரிமை ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ளது.
கல்விக்கும் உடல்நலத்திற்கும் பாதிப்பளிக்கும் வேலைகளில் இருந்து ஒதுங்கியிருப்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும், விளையாடுவதற்கும் குழந்தைகளுக்கு உரிமை உள்ளது. எல்லா வகையான முறைகேடுகளில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உள்ளது என்று குழந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
பெரியவர்கள் தங்களின் உரிமைகளைப் பற்றி அறிந்து தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும் உரிமையும் குழந்தைகளுக்கு உள்ளது.
தரமான கல்வி பெறுவதற்கான உரிமை எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ளது. கூடுமானவரை கல்வி பெறுவதற்கு எல்லா குழந்தைகளையும் நீதிபதிகள் ஊக்குவிக்க வேண்டும். கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, மூலம் குழந்தைகளுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிக் கற்றுத்தர வேண்டும்.
எல்லாப் பள்ளிகளிலும் குழந்தைகள் உரிமை தொடர்பான ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதை மாவட்ட நீதிபதிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று சாந்தா சின்ஹா தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.