தேவேகவுடா விதித்த நிபந்தனைகளை ஏற்காவிட்டால், பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் ராமேசுவர் தாகூரிடம் ஆதரவு கடிதம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங்குக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.
குமாரசாமி தலைமையில் மேற்பார்வை குழு அமைத்து திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும், கூட்டணி கட்சிகள் மீது ஊழல் புகார்களை தெரிவிக்க கூடாது உட்பட 12 நிபந்தனைகளை தேவேகெளடா கூறியுள்ளார்.
இந்த நிலையில், தேவேகவுடா விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து அவருடன் பேச்சு நடத்த, பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய துணை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று பெங்களூர் வந்தார்.
முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரகவுடா வீட்டில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், ஆளுநர் ராமேசுவர் தாகூர் விடுத்த அழைப்பை ஏற்று, குமாரசாமி நேற்று மாலை கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னரை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேவே கவுடா விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்காவிட்டால் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்றார். இதனால் கர்நாடக அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்ட்டு உள்ளது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் முன்பு நடைபெறும் அணிவகுப்பில் ஜனதா தளம் (எஸ்) சட்டமனற் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்களா? என்ற கேள்விக்குறியும் எழுந்து உள்ளது.