சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்துவருவதால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்படும் என்று நிச்சயமாகத் தெரிகிறது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய்பக்கு 97 டாலராக அதிகரித்து விட்டது. இதன் விலை அடுத்த சில வாரங்களில் 100 டாலராக அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது. (சவுதி, ஒமன் நாடுகளிடமிருந்து பிரவுன்ட் கச்சா எண்ணையை இந்தியா வாங்குகின்றது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் விலை, சர்வதேச கச்சா எண்ணெயின் விலையை விட சுமார் 8 முதல் 10 டாலர் வரை குறைவாக இருக்கும்)
நேற்று முன்தினம் பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது என்பதை பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை, நேற்று முரளி தியோரா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசுகையில், பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பை தடுத்து நிறுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
பிரதமரிடம் நடத்திய ஆலோசனையின் போது, நேரம் இல்லாத காரணத்தினால் இது பற்றி விரிவாக விவாதிக்கவில்லை. இன்னும் இரண்டொரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரிக்காது என்று உறுதியாக கூறமுடியாது என்று முரளி தியோரா தெரிவித்தார்.
இதனால் அடுத்த வார இறுதியில் (தீபாவளிக்குப் பிறகு) பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.