நொய்டா தொடர்கொலை வழக்கு: ம.பு.கவுக்கு தாக்கீது!
Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (17:36 IST)
நாட்டை உலுக்கிய நொய்டா தொடர்கொலை வழக்கில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறித் தொடரப்பட்ட வழக்கில் உத்தரபிரதேச, மேற்குவங்காள அரசுகள், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் ஆகியவற்றிற்கு தாக்கீது அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
தலைநகர் புதுடெல்லியை அடுத்துள்ள நொய்டா தொழிற்பேட்டை அருகில் உள்ள நிதாரி கிராமத்தின் சாக்கடையிலிருந்து கொத்துக் கொத்தாகச் சிறுமிகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இச்சிறுமிகளைக் கற்பழித்துக் கொலை செய்ததாக மணீந்தர்சிங் பாந்தர், அவரின் வீட்டு வேலைக்காரன் சுரேந்திர கோலி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விசாரித்து வருகிறது.
இந்நிலையில், கொல்லப்பட்ட சிறுமி ஒருத்தியின் தாயான பந்தனா சர்க்கார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நிதாரியில் 15 சிறுமிகளின் எழும்புக் கூடுகள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் அனைவரும் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான மணீந்தர் சிங் பாந்தரைக் காப்பாற்ற காவல் துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் முக்கியச் சாட்சிகளுக்கு பாந்தர் தரப்பிலிருந்து தொடர்ந்து மிட்டல்கள் வருகின்றன. எனது குடும்பத்திற்கும் மிரட்டல்கள் வந்தன. கடந்த மே மாதம் 18-ஆம் தேதி எனது கணவர் ஜதீன் சர்க்கார் கொல்லப்பட்டார். அவரின் உடல் ரயில்பாதை ஒன்றின் அருகில் கிடந்தது.
இதுகுறித்து காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. உயரதிகாரிகளின் தலையீட்டினால் எனது புகாரை விசாரிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர்.
நிதாரி கொலைவழக்கில் 6 குற்றப்பத்திரிகைகளை ம.பு.க. தாக்கல் செய்தது. அவற்றில் பாந்தரின் மீது மிகச்சிறிய குற்றங்களே கூறப்பட்டிருந்தன.
பாந்தருக்கு எதிரான முக்கியச் சாட்சிகள் அடங்கிய வழக்கு விவரப் புத்தகத்தை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்யவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவர் கொலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் பி.என்.அகர்வால், பி.பி.நாவலேக்கர், டி.கே.ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, உத்தரபிரதேச, மேற்குவங்காள அரசுகள், ம.பு.க. ஆகியவற்றிற்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.