அணு சக்தி ஒத்துழைப்பு விவகாரத்தில் இந்தியா வேகமாக செயல்பட வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்திப்பது நமது ஜனநாயகத்தை அவமதிப்பதாகும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
வாஷிங்டனில் கடந்த செவ்வாய்க் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அயலுறவுத் துறையின் சார்புச் செயலர் நிக்கலாஸ் பர்ன்ஸ், இந்த ஆண்டின் இறுதிக்குள் அணு சக்தி ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்திடல் வேண்டும் என்று கூறினார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, ஒரு நாட்டின் ஜனநாயக நடைமுறைகளை தனது தேவைகளுக்காக வேறொரு நாடு வளைக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அயலுறவு சார்புச் செயலரின் பேச்சு நமது ஜனநாயகத்தை அவமதிப்பதாகும் என்று மார்க்ஸிஸ்ட் கட்சியின் மக்கள் ஜனநாயகம் எனும் இதழிற்கு யெச்சூரி தலையங்கம் எழுதியுறள்ளார். இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்துவரும் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் அத்வானியை இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்ட் சந்தித்து பேசியுள்ள நிலையில், ஆட்சிக்கு ஆதரவு தந்துவரும் மார்க்ஸிஸ்ட் கட்சி, இந்த கண்டனத்தின் வாயிலாக தனது கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளது.