மத்திய அரசு கவிழ்வதை விரும்பவில்லை : மார்க்சிஸ்ட்!
Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (17:10 IST)
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது முழுஆயுளையும் நிறைவு செய்ய வேண்டும் என்றுதான் இடதுசாரிகள் விரும்புகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதி பாசு தெரிவித்துள்ளார்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திவைப்பது என்று பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துள்ள முடிவை அவர் வரவேற்றுள்ளார்.
கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதி பாசு, ''மத்திய அரசு கவிழ வேண்டும் என்றோ, புதிதாகத் தேர்தல் வரவேண்டும் என்றோ நாங்கள் விரும்பவில்லை'' என்றார்.
மேலும், ''மக்களின் நலன்களுடன் முரண்பட்டு நின்றாலும், மத்திய அரசு இன்னும் சுமூகமாகத்தான் செயல்பட்டு வருகிறது.
இப்போது எங்களின் கருத்துகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே மீதமுள்ள ஒன்றரை ஆண்டுகளையும் அவர்கள் நிறைவு செய்வார்கள்'' என்றும் ஜோதி பாசு தெரிவித்தார்.
அணு சக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.
ஆனால், சிக்கல்கள் களையப்பட்டு அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று நம்புவதாக நேற்று பிரதமர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முரண்பட்ட கருத்துகள் பற்றிக் குறிப்பிட்ட ஜோதி பாசு, மத்திய அரசு கவிழ்வதை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.