2010-இல் சுற்றுலா பயணிகள் வருகை இருமடங்காகும் : அரசு தகவல்!

Webdunia

வியாழன், 18 அக்டோபர் 2007 (19:33 IST)
அடுத்த மூன்று ஆண்டுகளில் அயல்நாட்டுச் சுற்றுலா பயணிகளின் வருகை இருமடங்கு அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

''தற்போது ஆண்டிற்கு 44 லட்சம் சுற்றுலா பயணிகள் அயல்நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகின்றனர். இது 2010-இல் 1 கோடியாக அதிகரிக்கும்'' என்று மத்திய சுற்றுலாத் துறை இயக்குநர் தேவேஷ் சதுர்வேதி தெரிவித்தார்.

மேலும், ''இந்த ஆண்டு அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 60 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணையதள விளம்பரங்கள் நமது நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே பல்வேறு மொழிகளில் உள்ள இணைய தளங்கள் வழியாக நமது நாட்டின் சிறப்பை எடுத்துச் சொல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை ஜப்பான், சீனா, பிரெஞ்சு மொழிகளில் நமது இணைய தளங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்காக அரசு ஆண்டிற்கு ரூ.40 கோடி செலவிடுகிறது.

குறிப்பாக 20 முதல் 40 வயது வரையுள்ள பயணிகளை விளம்பரங்கள் அதிகமாக ஈர்க்கின்றன. நமது நாட்டிற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளில் 60 விழுக்காட்டினர் இந்த வயதினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006 -ஆம் ஆண்டில் 6.56 பில்லியன் டாலர் மதிப்புள்ள அன்னியச் செலாவணி சுற்றுலா மூலம் நமக்குக் கிடைத்தது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உள்நாட்டுச் சுற்றுலாவும் நமது மிகப்பெரிய பலமாகும். கடந்த ஆண்டு 46 கோடி பேர் சுற்றுலா சென்றுள்ளனர்'' என்றும் சதுர்வேதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்