சேது திட்டம்: தீர்மானம் கொண்டு வர காங்கிரசுக்கு தடுமாற்றமா?-சுதர்சனம் விளக்கம்!

Webdunia

புதன், 17 அக்டோபர் 2007 (17:19 IST)
உச்ச நீதிமன்றத்தில் சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் டி. சுதர்சனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய டி. சுதர்சனம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் எப்படி தீர்மானம் கொண்டு வர முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்காக காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த டி. சுதர்சனம், கொண்டு வராது என்றும், வேறு எந்த கட்சியாவது சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தால் அது தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று கூறினார்.

சேது சமுத்திர திட்டம் மட்டுமல்லாது, நாங்குனேரி தொழில்நுட்ப பூங்கா, டைட்டானியம்-ை-ஆக்ஸைடு தொழிற்சாலை, குளச்சல் துறைமுகத் திட்டம், முட்டம் மீன்பிடித் துறைமுகத் திட்டம் என பின்தங்கியுள்ள தென் மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் வேலை வாய்ப்புக்கு வழி வகுக்கும் அனைத்து திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற காங்கிரஸ் எப்போதும் ஆதரவு தரும் என்று மேலும் டி. சுதர்சனம் கூறினார்.

கொப்பரைத் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் ஏழை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் அவர்களிடமிருந்து அரசே கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்க வேண்டும் எனவும் டி. சுதர்சனம் அரசைக் கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்