மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர் நேற்று தமது தொகுதியான மயிலாடுதுறைக்கு சென்றார். நள்ளிரவு 3 மணியளவில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கிருந்து அவர் கார் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் இன்று பகல் 12 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
மணிசங்கர் ஐயர் சென்னைக்கு அழைத்து வரப்படும் தகவல் சென்னை விமான நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. எனவே அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். விமானத்திலிருந்து மணிசங்கர் ஐயர் சக்கர நாற்காலியில் இறக்கி அழைத்து வரப்பட்டார்.
முக்கிய பிரமுகர்களுக்கான அறையில் அவர் தங்கினார். விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவர்கள் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தார்கள். பிறகு மேல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.