பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மாநில அரசுகளுக்கு இடையே முழுமையான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு இல்லாத நிலையில், பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு சிறப்பு அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது!
ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மஸ்ஜித், அஜ்மீரின் புகழ்பெற்ற மொய்ன்-உத்-தீன் சிஸ்தியின் தர்கா, பஞ்சாப் மாநிலம் லூதியானா திரையரங்கம் ஆகியவற்றில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் ஒரே விதமான அடையாளம் கொண்டிருந்தும், அது தொடர்பான புலனாய்வில் எந்தவொரு முன்னேற்றமும் காணப்படாத நிலையில், அகில இந்திய அளவில் ஒரு புலனாய்வு அமைப்பை சிறப்பாக ஏற்படுத்துவதற்கு உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
பயங்கரவாதத்தை ஒடுக்க ஒரு சிறப்பு அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்புதலைப் பெற விரைவில் மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் கூட்டுவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.
பயங்கரவாதத்தை ஒடுக்க அகில இந்திய அளவில் ஒரு சிறப்பு அமைப்பு தேவை என்பதை வீரப்ப மொய்லி, என்.ஆர். மாதவ மேனன் ஆகியோர் தலைமையிலான நிர்வாக சீர்திருக்க குழுக்கள் மத்திய அரசிற்கு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சிறப்பு அமைப்பை ஏற்படுத்துவது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது என்று பாரதிய ஜனதா ஆளும் மாநில அரசுகள் கூறிவரும் நிலையில், தற்பொழுது உருவாகியுள்ள சூழல் அவர்களையும் சம்மதிக்கச் செய்யும் என்று மத்திய அரசு நம்புகிறது.
பயங்கரவாதத்திற்கு மாநில எல்லைகளைக் கடந்து தொடர்புகள் உள்ளதும், பயங்கரவாத அமைப்புகள் ஆங்காங்கு சிறு சிறு குழுக்களை ஏற்படுத்தி நினைத்த இடத்தில் தாக்குதல் நடத்துவதும் தடுக்கப்பட வேண்டுமெனில், அகில இந்திய அளவில் தனித்த புலனாய்வு அமைப்பு ஒன்று அவசியம் என்று பல்வேறு காவல்துறை நிபுணர்களும் பரிந்துரைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.