லூதியானா குண்டுவெடிப்பு : 12 பேர் கைது!
Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (17:29 IST)
பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் உள்ள திரையரங்கில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இந்நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நேற்றிரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் படம் பார்த்துக் கொண்டிருந்த 3 பேர் நிகழ்விடத்திலேயே இறந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தனர்.
இத்தாக்குதலில் 33 பேர் படுகாயமடைந்தனர். இதில் 10 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தாக்குதல் குறித்துத் தகவல் அறிந்ததும், பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கடும் கண்டனம் தெரிவித்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
இதற்கிடையில், நிகழ்விடத்திற்கு தேசியப் பாதுகாப்புப் படையினர் வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக 12 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் காலியா கூறியுள்ளார்.
அதேவேளையில், மாநிலத்தின் உளவுத்துறை செயல்பாடு மிக மோசமாக உள்ளது என்று உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஷ்வால் விமர்சித்துள்ளார்.
குண்டுவெடிப்பு விசாரணைக்கு கூடுதல் உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.