பிரதமர் மன்மோகன் சிங் நைஜீரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று காலை புதுடெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் அன்புடன் வழியனுப்பி வைத்தனர். .
பிரதமர் மன்மோகன் சிங் நைஜீரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் பயணமாக இன்று புதுடெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு நைஜீரியாவுக்கு செல்லும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2003ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நைஜீரியா சென்றார். ஆனால் அவர் அரசு முறை பயணமாக செல்லாமல், அங்கு நடைபெற்ற காமன்வெல்த் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றார்.
நைஜீரியாவில் பல்வேறு ஒப்பந்தங்களை இருநாடுகளும் கையெழுத்திடுகின்றன. நைஜீரியா நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுகிறார். நைஜீரியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் மன்மோகன்சிங் அங்கு நடைபெற உள்ள, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடெல்லி விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். பயணத்திற்கு முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் இந்தியா எதிர்நோக்கி உள்ளதை போன்ற அதே சவால்களை எதிர்நோக்கி உள்ளது என்றும், இந்த நாடுகளுடன் உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த தமது பயணம் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடனான உச்சிமாநாடு சர்வதேச அளவிலும், முத்தரப்பு உறவுகள் விஷயத்திலும் வலுவான ஒத்துழைப்பை கோரும் மாநாடாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ள நிலையில், அணுசக்திக்கு உதவும் நாடுகளான பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகியவற்றிற்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுடனும் அந்நாட்டு அதிபர் தாபோ மெபேகி உடனும், பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவுடனும் அவர் பேச்சு நடத்துகிறார்.