குஜராத் மீனவர்கள் சோனியாவைச் சந்திக்கின்றனர்!
Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (13:33 IST)
பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 311 இந்திய மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக, குஜராத் மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்த 14 பேர் கொண்ட குழுவினர் இன்று காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்திக்கின்றனர்.
முன்னதாக குஜராத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த குஜராத் மீனவர் சங்த்தின் பொதுச் செயலாளர் ஜீவன்லால் ஜூங்கி கூறியதாவது:
பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய மீனவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
தற்போது பண்டிகைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசு அறிவித்த நிவாரணம் இன்னமும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு வந்து சேரவில்லை.
பாகிஸ்தான் அதிகாரிகள் கைப்பற்றியுள்ள பெரிய விசைப் படகுகளுக்கு ரூ.5 இலட்சமும், சிறிய மீன்பிடி படகுகளுக்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் ஏற்கெனவ அறிவித்துள்ளார். அதுவும் வந்து சேரவில்லை.
நம் மீனவர்கள் பயன்படுத்திய ரூ.60 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 35க்கும் மேற்றபட்ட படகுகளை பாகிஸ்தான் கடற்படைகைப்பற்றி வைத்துள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம், நிதி உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று காங்கிரசு தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் பலமுறை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
இந்நிலையில் எங்கள் சங்கத்தின் குழுவினர் டெல்லி சென்று சோனியா காந்தியைநேரில் சந்திக்கின்றனர்.
பிரதமர் அறிவித்த நிவாரணத்தை உடனடியாக வழங்குமாறு கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்திற்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டோர் குடும்பங்கள் புதிதாகப் படகுகளை வாங்குவதற்கு எளிய கடன் உதவிகளை வழங்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவர்.
மேலும், சோனியா காந்தியே குஜராத்திற்கு வந்து மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றும் எங்கள் குழு வேண்டுகோள் விடுக்கும் என்று ஜீவன்லால் ஜூங்கி தெரிவித்தார்.