இந்தியா சொந்தமாக தயாரித்து நிறுவியுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் வரும் 15-ந் தேதி முதல் செயல்படத் துவங்கும்.
ஹைதரபாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை மத்திய அமைச்சர் கபில் சிபல் துவக்கி வைக்கிறார்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் சுனாமி ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர்.
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை கருவியை தயாரிக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியது. 3 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியை அடுத்து சுனாமி எச்சரிக்கை கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய தேசிய மையத்தின் கடல் தகவல் அமைப்பின் இயக்குனர் சைலேஷ் நாயக் செய்தியாளர்களிடம் பேசினார்.
"கடல் அழுத்தத்தை அளவிடும் இந்த கருவியில் நான்கை சோதனை முறையில் வங்காள விரிகுடாவில் கடந்த மாதம் 12-ந் தேதி அமைத்தோம். அதேபோல 2 கருவியை அரபிக்கடலில் பொருத்தினோம். இந்த கருவி கடலின் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட 30 நிமிடத்தில் இந்த கருவி மூலம் கடலில் ஏற்படும் மாற்றத்தை அறிந்து சுனாமி வருமா? இல்லையா? என்பதை உறுதிபடுத்த முடியும்" என்று கூறினார்.
இந்த கருவியை முறையாக வரும் 15-ந் தேதி மத்திய அமைச்சர் கபில் சிபல் தொடங்கி வைக்கிறார். மேலும் 12 கருவிகளை கடல் பகுதியில் அமைக்க இருக்கிறோம். இதில் 10 கருவிகள் வங்காள விரிகுடாவில் அமையும் என்றார் சைலேஷ் நாயக்.
எங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம், பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ஆகியவற்றில் இருந்து நிலநடுக்கம் பற்றி தகவல் உடனடியாக வருகிறது. இதைத்தவிர டிஜிட்டல் இணைப்பு மூலம் உலகின் எந்த மூலையில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் எங்களுக்கு தகவல் வந்து விடும் என்றார் அவர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு அடுத்த 30 நிமிடத்துக்குள் சுனாமி வாய்ப்பு இருந்தால் சிவப்பு எச்சரிக்கை விடப்படும். சுனாமி வலுவிழந்த அடுத்த 2 மணி நேரத்துக்கு பிறகு ஆரஞ்சு எச்சரிக்கையாக அறிவிக்கப்படும். அப்போதும் கடலோர பகுதி மக்கள் உஷாராக இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைலேஷ் நாயக் கூறினார்.