உள்நாட்டு பாதுகாப்பு கவலையளிக்கிறது : பிரதமர்!

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (20:31 IST)
நமது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மத்திய அரசிற்கு மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்றும், உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!

டெல்லியில் நடைபெற்று வரும் மாநில காவல் துறைகளின் தலைமை இயக்குநர்கள், காவல் தலைமை ஆய்வாளர்களின் 42வது அகில இந்திய மாநாட்டில் பேசிய பிரதமர், மக்கள் சட்டத்தை தங்களில் கைகளில் எடுத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது என்றும், அதற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புக்கள், நீதித்துறை ஆகியவற்றின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியே காரணம் என்று கூறினார்.

நமது நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை உளவுத் திறனின் மூலம் அறிந்து தடுக்க வேண்டும் என்றும், அதற்கு ஒழுக்கமும், அரசியல் கலவாமையும், ஊழலற்ற செயல்பாடும் தேவை என்று மன்மோகன் சிங் கூறினார்.

நமது நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் முயற்சியே ஹைதராபாத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் என்று கூறிய பிரதமர், உறுதியான ஊக்கமுடன் செயலாற்றவும், தங்கள் இலக்குகளை நிறைவேற்றவும், உறுதியுடன் இருக்கும் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களை சராசரி நடைமுறைகளில் இருந்து மேம்பட்டுத்தான் முறியடிக்க வேண்டும் என்று கூறினார்.

நாட்டில் குண்டர்கள், தாதாக்கள் எண்ணிக்கை அதிகரிப்பும், கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்றவை அதிகரித்து வருவதும் கவலையளிப்பதாகக் கூறினார்.

நாட்டில் முழுமையான பாதுகாப்பு ஏற்பட காவல்துறைக்குத் தேவையான பயிற்சி, திறன் மேம்பாடு, கருவிகள், ஆள் சேர்ப்பின் மூலம் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், வேகமான இயக்கம், அச்சுறுத்தல்களை எதிர்க்கும் மனப்பாங்கு ஆகியவைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்