அணு சக்தி முகமையுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் : அணு சக்தித்துறை!

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (19:43 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் சமூக ரீதியான அணு சக்தி உலைகளை கண்காணிப்பது தொடர்பான தனித்த ஒப்பந்தத்தை உருவாக்க சர்வதேச அணு சக்தி முகமையுடன் பேசி வருவதாக இந்திய அணு சக்தித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன!

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று இடதுசாரிகள் கூறிவரும் நிலையில், சர்வதேச அணு சக்தி முகமையுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், இந்தியாவிற்கென்று தனித்த கண்காணிப்பு ஒப்பந்த வடிவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அணு சக்தித் துறை வட்டாரங்கள் கூறியதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அணு மின் நிலையங்களை கண்காணிப்பது தொடர்பான இறுதி ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு அடிப்படையாக ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அதற்கான வரைவை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளதென்றும், எனவே, இந்தப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அணு சக்தி வட்டாரங்கள் கூறியதாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர வேண்டும். அதற்கான ஒப்பந்தத்தை உருவாக்கும் இறுதிகட்டம் வரை காத்திருக்க முடியாது. ஏனெனில் கண்காணிப்பு தொடர்பான ஒப்பந்தத்தை உருவாக்குவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. எனவே, அது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அணு சக்தித் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணு சக்தி முகமையின் மாநாட்டிற்குச் சென்ற இந்திய அணு சக்தித்துறையின் தலைவர் அனில் ககோட்கர், இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், ஐ.நா. அவையில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி நியூயார்க்கில் பேசுகையில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் தெரிவித்து வரும் எதிர்ப்பு ஜனநாயகத்தில் எல்லாவிதமான கருத்துக்களும் ஆராயப்பட்டே ஒத்த கருத்தை எட்டுவதற்கான போக்கே தவிர, அதுவொரு அச்சுறுத்தல் இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில், கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்துப் பேசி வருவதாக இந்திய அணு சக்தித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்