மலையாள எழுத்தாளர் விஜயன் மரணம்!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (21:18 IST)
பிரபல மலையாள எழுத்தாளரும், தத்துவார்த்தகரும், மார்க்சிஸ்ட் கொள்கைவாதியுமான எம்.என். விஜயன் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது மரணமடைந்தார்!

இன்று காலை திருச்சூரில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது விஜயனுக்கு திடீரென்று கண்கள் சொறுகியது. அப்படியே சாய்ந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை தூக்கிச் சென்று காரின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் வார இதழான தேசாபிமானியின் ஆசிரியர் பொறுப்பாற்றிய எம்.என். விஜயன், தலைசிறந்த கலை, இலக்கிய விமர்சகர் ஆவார்.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் லஞ்சம் வாங்குவதாகவும், அயல்நாட்டில் இருந்து நன்கொடை என்ற பெயரால் பணத்தைப் பெறுவதாகவும் குற்றம் சாற்றிய விஜயன், அக்கட்சியில் இருந்து 4 மாதங்களுக்கு முன்னர்தான் விலகினார்.

1930 ஆம் ஆண்டு பிறந்த விஜயன், கேரள அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்