இந்தியா மருத்துவ மூலிகைகளை பயன்படுத்தவில்லை!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (19:37 IST)
உலகில் அதிக மருத்துவ மூலிகைகளை கொண்ட நாடு இந்தியா. மற்ற எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவிடம் 8,000 வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் உள்ளன. இவற்றில் பத்து விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று இந்திய வாசனை மற்றம் மருத்துவ மூலிகைகள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சங்கத்தின் தலைவர் தாகூர் ராந்தி சிங் கூறுகையில், உலகத்தில் உள்ள தாவர வகைகளில் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளிடமும் 60 விழுக்காடு உள்ளன.

இந்தியாவில் கிராமப்புறங்களில் வாழுகின்றவர்கள் 8000 விதமான மருத்துவ மூலிகைகளை பயன்படுத்துகின்றனர். இதில் 880 வகை மூலிகைகள் மட்டும் தான் வியாபாரம் செய்யப்படுகிறது.

இந்தியா 48 வகை மூலிகைகளை ஏற்றுமதி செய்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து 42 வகை மூலிகைகளை இறக்குமதி செய்கிறது. வாசனை திரவியங்களுக்கான மற்றம் மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை பயிரிடுவதன் மூலம் பத்து இலட்சம் ஆதிவாசிகள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும்.

இவற்றை திட்டமிட்டு முறையாக உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்தால் 2010 ஆம் ஆண்டில் ரூ.பத்தாயிரம் கோடி அந்நியச் செலவாணி வருவாய் பெற வாய்ப்பு உண்டு என்று சிங் கூறினார்.

மேலும் அவர், ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரிய வகை வாசனை மற்றும் மருத்துவ மூலிகைகள் உள்ளன. இதை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் ஜம்மு - காஷ்மீர் அரசு விவசாயிகளை வழக்கமாக பயிரிடடும் பயிர்களில் இருந்து மருத்துவ மூலிகைகள், வாசனை மூலிகைகளை பயிரிடும் படி அறிவுறுத்தவில்லை என்று சிங் குற்றம் சாட்டினார்.

அத்துடன் மத்திய விவசாய அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய தோட்டக்கலை வாரியம் அறிவுறுத்தியபடி ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு விவசாயிகள் தாங்களாகவே மாற்றுப் பயிராக மருத்துவ மூலிகைகளை பயிரிட ஊக்குவிப்பதற்கு தவறி விட்டது என்று குற்றம் சாட்டிய சிங், மத்திய தோட்டக்கலை வாரியத்தின் வழிகாட்டுதலுடன், மாநில தோட்டக்கலை வாரியம் விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும். இந்த துறையை மேம்படுத்த தேசிய தோட்டக்கலை வாரியம் திட்டம் தீட்டியது. ஆனால் இதில் மாநில அரசு அக்கறை செலுத்தவில்லை என்று சிங் குறை கூறினார்.

காஷ்மீரில் உற்பத்தி செய்யப்படும் குங்குமப் பூவிற்கு காப்புரிமை தேவை. காஷ்மீர் குங்குமப்பூவுடன், நாட்டின் மற்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூவும் அயல்நாட்டு குங்குமப்பூவும் கலக்கப்படுகின்றன.


இதனால் காஷ்மீர் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல பகுதிகளில் குங்குமப்பூ பயிரிட வாய்ப்பு உள்ளது என ஆராய்ச்சியில் இருந்து தெரிய வந்துள்ளது. ஆனால் இதற்கு மாநில அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று சிங் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்