ஆன்மீகத் தலங்களுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் : உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!
Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (13:46 IST)
ஆன்மீகத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் ஆகியோரைத் பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் எச்சரித்துள்ளார்.
''நாட்டில் பயங்கரவாதம், வன்முறை, குற்றங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே தடுக்கும் வகையில் செயலாற்றல் நிறைந்த உளவுத்துறையும், ஊக்கம் நிறைந்த காவல்துறையும் தேவை'' என்றும் அவர் கூறியுள்ளார்.
புது டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய காவல் அதிகாரிகள் மாநாட்டினை பாட்டீல் தொடங்கி வைத்தார்.
அப்போது, மிகப்பெரிய நகரங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகள் அமைப்புகளின் கட்டமைப்புகள் இனி செயல்படக் கூடும். பயங்கரவாதிகள் அமைப்புகள் தங்களுக்குத் தேவையான நிதியைப் பெற கள்ள நோட்டுகளை பயன்படுத்துவார்கள் என்று கூறினார்.
தற்போது தீவிரவாதிகள் நவீனத் தொழில்நுட்பங்களையும் தனிசிசிறப்புமிக்க ஆயுதங்களையும் பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்கள் குற்றங்களைச் செய்யும்போது அதைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது.
காவல்துறையினரும், நவீன ஆயுதங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளின் சதி முயற்சிகளை வலிமையாக முறியடிப்பதற்கு புதுப்புது வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று பாட்டீல் கேட்டுக் கொண்டார்.
மேலும் ''காவற்பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள மிகச்சரியான, நம்பத்தகுந்த, செயலாற்றல் மிக்க உளவுத்துறை தேவை. மாநிலங்களின் உளவுத்துறைகள் வலிமை குன்றியுள்ளன. எதிர்காலத் தேவைகளையும் இப்போதைய அவசியத்தையும் கருத்தில் கொண்டு அவற்றை நவீனத் தொழில்நுட்பங்களுடன் வலுப்படுத்த வேண்டியது அவசியம்'' என்று அவர் வலியுறுத்தினார்.
தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின்னர், எங்கு அவை சரியாகப் பயன்படுத்தப்படுமோ அங்கு அவை அனுப்பப்பட வேண்டும் என்றும் பாட்டீல் தெரிவித்தார்.