வேலை வாய்ப்புத் திட்டம் விரிவுபடுத்தப்படும் : மத்திய அரசு!

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (17:47 IST)
தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டம் குறித்து ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் இரகுவன்ஷ் பிரசாத் சிங், நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோருடன் பிரமதர் மன்மோகன்சிங் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் பாரு கூறியுள்ளார்.

இராகுல்காந்தி, காங்கிரசுக் கட்சியின் மற்ற பொதுச் செயலாளர்களோடு கடந்த புதன்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலையளிக்கும் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று இராகுல்காந்தி வலியுறுத்தினார்.

முன்னதாக, இத்திட்டம் 200 மாவட்டங்களில் இருந்து 330 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் சிதம்பரம் அறிவித்திருந்தார்.

நாட்டில் மொத்தம் 612 மாவட்டங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ.12,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்