வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : பணிகள் பாதிப்பு!

Webdunia

வியாழன், 27 செப்டம்பர் 2007 (19:34 IST)
பாரதஸ்டேடவங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ததால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.

பாரத அரசு வங்கிக்கு ஏழு துணை வங்கிகள் உள்ளன. இவை ஸ்டேட் பாங்க் ஆஃப் செளராஷ்டிரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பிக்கானீர் மற்றம் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தூர் ஆகியவைகளாகும்.

இதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் செளராஷ்டிரா, தவிர மற்ற வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், சென்னை பாரி முனையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் அலுவலகம் முன்பு, வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர், இ.அருணாசலம் செய்தியாளர்களிடம், ஸ்டேட் பாங்க் ஆப் செளராஷ்டிரா தவிர, மற்ற வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதாக கூறினார்.

மேலும் அவர், பாரத் ஸ்டேட் வங்கியுடன், அதன் துணை வங்கிகளை இணைக்க மேற் கொண்டுள்ள முடிவால், பொது மக்களுக்கோ, அல்லது இந்த வங்கிகளுக்கோ, அல்லது அதன் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. இந்த இணைப்பால் பாரத ஸ்டேட் வங்கிக்குதான் நன்மை உண்டாகும். இந்த இணைப்பால் துணை வங்கிகளின் பல கிளைகள் மூடப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கி கிளையுடன் இணைக்கப்படும். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

வங்கித் தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், சிறிய வங்கிகள் தனியாக இயங்கி தாக்கு பிடிக்க முடியாது. வெளிநாட்டு வங்கிகள், தனியார் வங்கிகளுடன் போட்டியிட வேண்டும் என்றால், அதிகளவு மூலதனம் வேண்டும். நாடு முழுவதும் கிளைகள் தேவை என்பன போன்ற காரணங்களினால், பாரத அரசு வங்கியுடன், அதன் துணை வங்கிகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

பாங்க் ஆஃப் செளராஷ்டிராவின் இயக்குநர் குழுவும், பாரத அரசு வங்கியின் இயக்குநர் குழுவும் இந்த இரு வங்கிகளின் இணைப்பிற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளன. ஆகவே இந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்த வேலை நிறுத்தத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்