புதுவை மாநிலத்தில் ஜவுளி மற்றும் சுற்றுலாத் துறையில் அதிகளவு அந்நிய மூதலீட்டை ஈர்க்க வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள தொழில் அதிபர்கள் குழு, முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முதலீடு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தியது.
இந்தக் குழுவின் தலைவரான சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் , முதலமைச்சரை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள தொழில் அதிபர்கள் இங்கு அமையவிருக்கும் பேஷன் சிட்டியில் (ஆயத்த ஆடை தொழிற் பூங்கா) முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுவை மாநிலத்தில் மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை அமைக்க புதுவை அரசு ஊக்குவிக்கும். சிங்கப்பூரில் அரசு தொழில் துவங்குபவர்களுக்கு செய்து தரும் வசதிகளை நேரில் பார்வையிட என்னை சிங்கப்பூருக்கு வருமாறு சிங்கப்பூர் அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறினார்.