டாலரின் மதிப்பு குறைவு கவலையளிக்கிறது : சிதம்பரம்!

Webdunia

புதன், 26 செப்டம்பர் 2007 (18:46 IST)
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதால் அரசு கவலை அடைந்துள்ளதாகவும், டாலரின் மதிப்பு முறையற்ற வகையில் குறைந்தால் ரிசர்வ் வங்கி தலையிடும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள சிதம்பரம், பீட்டர்சன் இன்ஷ்டியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எகானாமிக்ஸ் என்ற கல்லூரியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதற்கு அரசு கவலை கொண்டுள்ளது. இந்த மதிப்பு உயர்வு முறையற்ற தன்மையில் இருந்தால் ரிசர்வ் வங்கி தலையிடும்.

டாலருடனான, இந்திய ரூபாய் மாற்று விகிதம் இருதரப்பும் பயன் பெறும் வகையில் அமைந்தது. ஈரோ உள்ளிட்ட மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.

கடந்த எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்குள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பத்து முதல் பத்தரை விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, அந்நியச் செலவாணி மாற்று விகிதம் அதிகரிப்பது அல்லது குறைவதற்கு அனுமதிக்கும் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இது முறையாக இருக்க வேண்டும்.

“அந்நியச் செலாவணி மாற்று விகிதம், அந்நியச் செலாவணி சந்தை நிலவரத்தை பொறுத்தது. இதை சந்தைதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இதில் இயற்கைக்கு மாறான ஏற்ற இறக்கம் காணப்பட்டாலோ, அல்லது முறையற்ற முறையில் இருந்தாலோ, ரிசர்வ் வங்கி தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று நினைக்கின்றேன். இதில் மத்திய அரசு செய்வதற்கு எதுவும் இல்லை.

இப்பொழுது ரூபாயின் மாற்று விகிதம், ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. ஆனால் நாம் இந்த சூழ்நிலையிலும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அமெரிக்க அரசாங்கம் டாலரின் மதிப்பு குறைவதை தடுக்க எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய ரூபாய் மதிப்பை பொறுத்து நான் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

நான் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் கூட, ரூபாயின் மதிப்பு மிக அதிகமாக உயர்வது குறித்து கவலை கொண்டுள்ளோம” என்று சிதம்பரம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்