மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்படட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் முடிவு நியாயமானதே என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது!
இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட இவ்வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே. தாக்கர், ஆர்.வி. ரவீந்திரன், தல்பீர் பண்டாரி ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு முன், மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி அரசு தலைமை வழக்கறிஞர் வாகனவதி இன்று வாதிட்டார்.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க சாதிய அடிப்படை தேர்வு செய்யப்பட்டது மிகச் சரியானதே என்று வாதிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜி.இ. வாகனவதி, பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு மிகக் கீழ்த்தரமான வேலைகளை செய்ய வைத்து அவர்களை சமூக ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ பிற்பட்ட நிலைக்கு தள்ளிய சமூகத்தில் அதே சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது சரியானதுதான் என்று வாதிட்டார்.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சமூகத்தினரை மற்ற முன்னேறிய சமூகங்களுக்கு இணையான சம நிலைக்கு கொண்டுவர வேண்டுமெனில், அவர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டால்தான் அது சாத்தியமாகும் என்றும், சமமற்றவர்களை சமநிலைப்படுத்த வேண்டுமெனில், அவர்களை மற்றவர்களுக்கு சமமாகப் பார்க்காமல், அந்த உரிய நிலையிலிருந்தே அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும் என்று வாகனவதி கூறினார்.
இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் குற்றம் சாற்றுவதைப் போல அரசின் இந்த கொள்கை வாக்கு வங்கி அரசியல் அல்ல என்று கூறிய வாகனவதி, ஆழ்ந்த ஆய்விற்குப் பிறகே அரசு முடிவெடுத்து இடஒதுக்கீடு அளிக்க முன்வந்தது என்று கூறினார்.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 29 (2) -ன் படி பொருத்தக்கூடாது என்று வாகனவதி கூறினார்.
அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்துக்கள் இடையே மட்டுமே சாதி அமைப்பு உள்ளதா? கிறித்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் இடையே சாதிகள் இல்லையா? என்று விளக்குமாறு கேட்டனர். அதற்கு பதிலளித்த வாகனவதி, இது தொடர்பாக மத்திய அரசு ஏற்றுக்கொண்ட மண்டல் அறிக்கையில் விவரமாக பதிலளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள 11 அம்சங்களுக்கு தான் பதிலளிக்கப் போவதாகவும், அதன்பிறகு பிற்படுத்தப்பட்டோரிடையே முன்னேறிய சமூகத்தினர் என்று கூறப்படும் வாதத்திற்கு கே. பராசரணும், மத்திய கூடுதல் வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியனும் விளக்கமளிப்பர் என்று கூறினார்.
இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 15 (4) மற்றும் 16 (4) ஆகியன விதிவிலக்கல்ல என்றும், அவைகள் 15 (1), 16 (1) ஆகியவற்றுடன் இணைந்ததே என்றும் வாகனவதி கூறினார்.