நிர்வாகத்தில் பெண்களுக்கு உரிய ஒதுக்கீடு : சோம்நாத் வலியுறுத்தல்!
Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (18:01 IST)
நிர்வாகத்தில் பெண்களுக்கு உரிய பங்கைத் தருவதற்கான குறிப்பிடத்தக்க மாற்றத்தை மனநிலையில் கொண்டுவர வேண்டும். அதற்காக சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்குவதன் மூலம் அவர்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
''அரசியலில் பெண்களை ஈடுபடுத்துவதற்கு சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்குவதும் ஒரு வழியாகும்'' என்று முதல் நாடாளுமன்ற காமன்வெல்த் பெண்கள் கருத்தரங்கை டெல்லியில் தொடங்கி வைத்துப் பேசிய சோம்நாத் கூறியுள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்ததன் மூலம் 10 இலட்சம் பெண்கள் அதிகாரம் பெற்றுள்ளனர் என்று கூறிய சோம்நாத், ''மத்திய மாநில அளவில் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு உரிய ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
''எதிர்காலத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விசயத்தில் அரசியல் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் பன்முகச் சிந்தனையோடு உள்ளோம்'' என்று சோம்நாத் தெரிவித்தார். மேலும் தான் சபாநாயகராக உள்ள நேரத்திலேயே இந்த அரசியல் கருத்தொற்றுமை ஏற்பட்டுவிடும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலக அளவில் எழுந்துள்ள பால் சமத்துவத்தின் அடிப்படையில், முடிவெடுக்கும் இடங்களில் பெண்கள் அமரவேண்டும். சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது தன்னிறைவிலிருந்து தொலைவில் உள்ளது. ''முடிவெடுக்கும் நிலைகளில் பெண்கள் ஒருபகுதியாக உள்ளபோது, சமூகம், அரசியல் மற்றும் குடும்பத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான நமது பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் வர வேண்டும்.'' என்று சோம்நாத் வலியுறுத்தினார்.