திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவம் விழா செய்திகளை அனுப்புவதில் நிருபர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
திருமலையில் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பற்றிய செய்தி, புகைப்படங்கள் அனுப்புவதற்கு நாடுமுழுவதும் இருந்து தொலைக்காட்சி, தினசரி பத்திரிகை செய்தியாளர்கள் குவிந்துள்ளனர்.
இங்கிருந்து செய்திகளையும், புகைப்படங்களையும் அனுப்புவதற்காக பத்திரிகை தகவல் மையம் அமைக்கப்பட்டது. இதனை திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைவர் பி. கருணாராக ரெட்டி திறந்து வைத்தார்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள கணினிகள் சரியாக இயங்காத காரணத்தினால், செய்தியாளர்கள் செய்திகளையும், புகைப்படங்களையும் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த தகவல் மையத்திற்கு மும்பையைச் சேர்ந்த நிறுவனம் இணைய வசதிகளுடன் கூடிய ஆறு கணினிகளை நிறுவியுள்ளது. இவை சரியாக இயங்காத காரணத்தினால் செய்தியாளர்கள் பல பிரச்சனைகளை எதிர் கொண்டனர்.
இங்கு நிறுவப்பட்டுள்ள கணினிகள் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முந்தைய தயாரிப்புகள். இதை தேவஸ்தான நிர்வாகம் நிராகரித்து விட்டது என கூறப்படுகிறது. அத்துடன் தகவல் மையத்தில் புதிய கணினிகள் நிறுவ, புதிய விலைப்புள்ளிகள் கோரப்பட்டன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் உரிய காலத்தில் கணினிகளை அமைக்கவில்லை என தெரிய வருகிறது.