அணு சக்தி ஆய்வுக் குழு : அரசு - இடது முரண்பாட்டில் மாற்றமில்லை!

Webdunia

புதன், 19 செப்டம்பர் 2007 (19:48 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்யக்கூடிய ஐ.மு. - இடதுசாரி தலைவர்கள் கொண்ட சிறப்புக் குழு இன்றைய இரண்டாவது சந்திப்பிலும் தங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை நீக்கிக் கொள்வதில் எந்த முன்னேற்றத்தையும் சாதிக்கவில்லை!

தலைநகர் டெல்லியில் அயலுறவு அமைச்சர் பிரணாப்குமார் முகர்ஜி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நிதியமைச்சர் சிதம்பரம் தவிர மற்ற அனைவரும் கலந்துகொண்டனர்.

2 மணி நேரம் நடந்த இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த சந்திப்பு மிகப் பயனுள்ளதாக இருந்தது என்று கூறினார்.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக தாங்களும், இடதுசாரிகளும் தயாரித்து அளித்த விளக்க அறிக்கைகளின் மீது இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பிரணாப் முகர்ஜி கூறினார்.

ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன், கடந்த 14 ஆம் தேதி தாங்கள் அளித்த விவர அறிக்கைக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதில்கள் ஒவ்வொன்றையும் விவாதித்து நிராகரித்ததாகக் கூறினார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அரசு நிலைப்பாட்டில் ஒரு அம்சம் கூட எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர்கள் வழக்கறிஞரின் வாதத்தைப் போல எல்லாவற்றையும் பேசுகின்றனர் என்று பரதன் கூறினார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டமே இன்றைய சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது என்று கூறிய ஃபார்வர்ட் பிளாக் தலைவர் தேவப்பிரதாப் விஷ்வாஸ், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக 5 பிரச்சனைகளை தாங்கள் முன்வைத்து விவாதித்ததாகக் கூறினார்.

இருதரப்பினரும் மீண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி சந்திப்பதென்று முடிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்