அரசு ஒப்பந்தங்கள் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதே - உச்ச நீதிமன்றம்!

Webdunia

திங்கள், 17 செப்டம்பர் 2007 (16:44 IST)
அரசு அளிக்கும் உப்பந்தங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டதே என்று மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது!

மும்பை டிரான்ஸ் ஹார்பர் சி லிங்க் எனும் திட்டத்திற்கு ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் அளித்த ஒப்பந்தப் புள்ளியை மராட்டிய அரசு நிராகரித்ததையடுத்து ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 19-ன் படி வணிகம் செய்யும் உரிமை என்பது அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பதே என்பதாகும். அப்படிப்பட்ட சம வாய்ப்பு அளிக்கப்படுகிறதா என்பதனை உறுதி செய்து, அதன்மூலம் பொது நலத்தை உறுதிபடுத்தும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது என்று கூறினார்.

பொதுமக்களின் நலன்களே பெரிதானது, அதற்கு அரசு தீட்டக்கூடிய திட்டங்களில் அளிக்கப்படும் ஒப்பந்தப் புள்ளிகள் அதனைக் கோரும் நிறுவனங்களுக்கு சமமான வாய்ப்பை அளித்துள்ளதா என்பதனை பரிசீலிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு உள்ளது என்றும், அது அரசமைப்பு ரீதியானது என்றும் எஸ்.ஹெச். கபாடியா கூறினார்.

ஒப்பந்தப் புள்ளிகளைக் கோருவதில் புரியாத வாசகங்களும், விளக்கப்படாத வாக்கியங்களும் இருப்பதே, அதற்காக போட்டியிடும் நிறுவனங்களுக்கு இடையே சமமான வாய்ப்பை அளிப்பதற்கு எதிரானதாக அமைகிறது என்று நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா கூறினார்.

மும்பை டிரான்ஸ் ஹார்பர் சி லிங்க் திட்டத்தில் ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனத்திற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்