பிரதமர், சோனியாவுக்கு எதிரான வழக்குத் தள்ளுபடி!
Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2007 (14:31 IST)
குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களின்போது வாக்குகளைப் பெறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்து அளித்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது!
உயர் நீதிமன்றத்தில் பயிற்சிபெற்றுவரும் வழக்கறிஞர்கள் இரவீந்ததிர குமார் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வி.பி. குப்தா, இந்த மனு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தார்.
'' இந்த வழக்கில் தகுந்த ஆதாரங்கள் எதையும் மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை, வெறும் செவிவழித் தகவல்களை வைத்து இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சட்டத்தைக் கேலிக்கூத்தாக்குவதைத் தவிர வேறெந்த நோக்கமும் இந்த மனுவிற்கு இல்லை, இது வெறுக்கத்தக்கது'' என்று நீதிபதி கூறினார்.
முன்னதாக, பிரதமர் மன்மோகன்சிங் உள்பட நாட்டின் முக்கியத் தலைவர்கள் சிலர் மீது வழக்கறிஞர் இரவீந்திரக் குமார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க மறுத்த கீழ் நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இரவீந்திரக்குமார் மேல்முறையீடு செய்தார்.
''குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும் என்றும், இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் எந்தச் சட்டத் தவறையும் இழைக்கவில்லை'' என்றும் நீதிபதி கூறினார்.