விபசார விடுதி செல்லும் ஆண்களுக்கு சிறை: மத்திய அரசு புதிய சட்டம்!
Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (12:10 IST)
விபசார விடுதிக்கு செல்லும் ஆண்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப் போவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பெண்களையும், சிறுமிகளையும் கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அபிடவிட் தாக்கல் செய்யுமாறு மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது.
இதையடுத்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அபிடவிட் தாக்கல் செய்தது. அதில், விபசார கொடுமையில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றும் பொருட்டு விபசார கடத்தல் (தடுப்பு) சட்டம் 1956ல் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி பெண்களும், சிறுமிகளும் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள். விபசார விடுதிக்கு செல்லும் ஆண்கள் குற்றவாளி ஆவார்கள். மேலும் பெண்களுடன் விபசாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரை சிறை தண்டனை அளிக்கவும் வகை செய்யப்படும்.
இது தவிர விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்துபவர்களுக்கு முதலில் பிடிபடும்போது 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும். அதே நபர்கள் அதே குற்றத்துக்காக அடுத்த முறை பிடிபட்டால் ஆயுள் தண்டனை வழங்கவும் திருத்தம் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான சட்ட திருத்தம் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த அபிடவிட்டில் கூறப்பட்டுள்ளது.