சஷிநாத் ஜா கொலை வழக்கு : சிபு சோரன் விடுதலை!

Webdunia

புதன், 22 ஆகஸ்ட் 2007 (16:08 IST)
தனது உதவியாளர் சஷிநாத் ஜா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவர் சிபு சோரனை டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்தது!

சஷிநாத் ஜா படுகொலை செய்யப்பட்டதில் சிபு சோரனுக்கு தொடர்பு உள்ளது என்பதனை சந்தேகத்திற்கு இடமின்றி மத்திய புலனாய்வுக் கழகம் நிரூபிக்கவில்லை என்று சிபு சோரன் சார்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஸ். சோதி, வி.என். சதுர்வேதி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

சிபு சோரனால் படுகொலை செய்யப்பட்டதாக பிஸ்காமோர் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது சஷிநாத் ஜாவின் உடல்தான் என்று மத்தியப் புலனாய்வுக் கழகம் கூறுவது நம்பத்தக்கதாக இல்லை என்றும், உண்மையில் சஷிநாத் ஜா கொல்லப்பட்டாரா என்பதே நிரூபிக்கப்படவில்லை என்றும் தங்களது தீர்ப்பில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறிவிட்டனர்.

மத்திய அமைச்சராக இருந்த சிபு சோர்னின் உதவியாளர் சஷிநாத் ஜா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஜார்க்கண்ட் நீதிமன்றம் அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து சிபு சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபு சோரன் தொடர்ந்த மேல் முறையீட்டில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்