சேலம் கோட்டம் : லாலு பிரசாத் சமரசம்

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (16:13 IST)
பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளைப் பிரித்து புதிதாக சேலம் ரயில் கோட்டம் உருவாக்குவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு தமிழக - கேரள முதலமைச்சர்கள் பேசித் தீர்வு காண வேண்டும் என்பது ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.

மக்களவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் கிருஷ்ணதாஸ், பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்ட பெரும் பகுதியை பிரித்து புதிய கோட்டம் உருவாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு தமிழக உறுப்பினர்கள் தங்கபாலு (காங்கிரஸ்), கிருஷ்ணசாமி (திமுக) எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் அவையில் சிறிது நேரத்திற்கு கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. அப்பொழுது கோபமாக குறுக்கிட்ட அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, "எந்தப் பிரச்சினையானாலும் பிளவு படுத்துவதாகவே உள்ளது. நாம் முதலில் இந்தியர்கள்... இது என்ன கேரள அல்லது தமிழக சட்டமன்றமா? இது நாடாளுமன்றம். அனைவரும் இந்தியர்களாக நடந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

கிருஷ்ணதாசை தொடர்ந்து தமிழக உறுப்பினர் கிருஷ்ணசாமி பேசுகையில், சேலம் கோட்டம் அமைப்பது முடிவான ஒன்று என்றும், அதனை கைவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

உறுப்பினர்களின் வாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சேலம் கோட்டம் உருவாக்குவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண இரு மாநில முதலமைச்சர்களும் பிரதமர் முன்னிலையில் பேச வேண்டும் என்று தாம் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால், இதுவரை அது நடைபெறவில்லை என்றும் கூறினார்.

இதற்குப் பிறகாவது இப்பிரச்சினைக்கு தீர்வு காண இரு மாநில முதல்வர்களையும் பிரதமர் அழைத்துப் பேச வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

பாலக்காடு கோட்டத்தில் இருந்து 621 கி.மீட்டர்களும், திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் 135 கி.மீட்டர்களும் கொண்ட சேலம் கோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அங்கு புதிதாக 85 கி.மீ. தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் லாலு பிரசாத் கூறினார்.

சேலம் கோட்டம் செயற்படுவதற்கான நாள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் லாலு பிரசாத் கூறினார்.

சேலம் கோட்டம் திட்டமிட்டபடி செப்டம்பர் 14ல் துவக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் வேலுவும் கூறி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(வார்த்தா)

வெப்துனியாவைப் படிக்கவும்