பெருகி வரும் எரிசக்தித் தேவையை சந்திக்க அணு சக்தி அவசியம் : பிரதமர்!

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (13:44 IST)
நாளுக்கு நாள் பெருகி வரும் எரிசக்தித் தேவையை சமாளிக்க அணு சக்தி மிக அவசியமானது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!

தலைநகர் டெல்லியில் எண்ணெய், இயற்கை எரிவாயு கழகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி உரை நிகழ்த்திய பிரதமர், நமது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் தேச நல நோக்குடன் அனைத்துக் கட்சிகளும் சிந்திக்க வேண்டும் என்று தான் வலியுறுத்த விரும்புவதாகக் கூறினார்.

"இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன் பெருகி வரும் எரிசக்தித் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும். நமது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அணு சக்தியும், சூரிய சக்தியும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அணு சக்தி உற்பத்தியை மேம்படுத்தவே எங்களது அரசு உறுதிபூண்டுள்ளது" என்று கூறிய பிரதமர், "இந்தப் பொறுப்பில் இருந்து எந்தவொரு அரசு பின்வாங்கினாலும் அதற்கு மக்கள் ஆதரவு கிட்டாது" என்று கூறி இடதுசாரிகளின் நிலைப்பாட்டை நாசுக்காக கண்டித்துள்ளார்.

நாளுக்கு நாள் நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதிக்காக செய்யப்படும் செலவு நாட்டின் பொருளாதாரத்தின் மீது மிகப்பெரும் சுமையை ஏற்றிவரும் நிலையில், அணு சக்தி, சூரிய சக்தி உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்துவது அவசியமாகிறது என்று பிரதமர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்