அணு ஒப்பந்தம் : கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஆலோசனை!

Webdunia

சனி, 18 ஆகஸ்ட் 2007 (21:08 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்று ஆட்சிக்கு ஆதரவளித்துவரும் இடதுசாரிகள் கூறிவிட்ட நிலையில், என்ன முடிவெடுப்பது என்பது குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்!

பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் பிரகாஷ் காரத்தும், சீதாராம் யச்சூரியும், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பை ஏற்க முடியாது என்றும், அது தொடர்பாக அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்றும் கூறிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு இடையே தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுடன் பிரணாப் முகர்ஜி பேசினார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவராமல தள்ளிப் போடலாமா என்றும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் நாராயணனுடன் பிரணாப் முகர்ஜி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

தேச நலனைக் கருத்தில் கொண்டு இறுதி முடிவு : காங்கிரஸ்!

90 நிமிடம் நடந்த இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, இடதுசாரிகள் முடிவு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான அகமது பட்டீல் ஆகியோர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசியுள்ளனர். இதேபோல, மற்ற தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட பிறகு பிரதமரும், சோனியாவும் இறுதி முடிவு எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இடதுசாரிகளின் முடிவிற்குப் பிறகு பிரதமரும், சோனியாவும் ஆலோசனை நடத்தச் சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் அபிஷேக் சிங்வி, இப்பிரச்சனையில் தேச நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி முடிவெடுக்கும் என்று கூறினார்.

எனவே, தேச நலனைக் கருத்தில் கொண்டு இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தத்தை ஏற்பது என்று பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்