அணு ஒப்பந்தம் : பிரதமரை காரத், யச்சூரி சந்திக்கின்றனர்!

Webdunia

சனி, 18 ஆகஸ்ட் 2007 (14:43 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தும், அக்கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சீதாராம் யச்சூரியும் இன்று பிரதமரைச் சந்திக்கின்றனர்!

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்க இயலாது என்று திட்டவட்டமாகக் கூறிவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், பிரதமரைச் சந்திக்கும் போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் உடனிருப்பார்கள்.

தங்களைப் பொறுத்தவரை இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கூறி வருகிறது.

நேற்றும், இன்றும் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்த முடிவுகளை பிரதமரிடம் இவர்கள் தெரிவிப்பார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்தாலும், அதற்காக ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவதில்லை என்ற முடிவில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்