இந்தியா மேற்கொண்டு வரும் 3 கட்ட அணு சக்தித் திட்டத்தை அமெரிக்கா உட்பட எந்த நாடாலும் தடுத்திட முடியாது என்று அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்!
பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அனில் ககோட்கர், இந்தியா மேற்கொண்டு வரும் அணு சக்தி திட்டத்தை - அது அணு மின் சக்தி தயாரிப்பதாக இருந்தாலும், அல்லது ராணுவ ரீதியிலானதாக இருந்தாலும் - அது சுதந்திரமான கொள்கையின் அடிப்படையிலான திட்டம் என்றும், அதனை எந்தவொரு நாடும் தடுத்திட முடியாது என்றும் கூறினார்.
"நமது சுதந்திரமான அணுத் திட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் எதனையும் இந்தியா அனுமதிக்காது. ராணுவ ரீதியிலான அணுத் திட்டத்தை முழுச் சுதந்திரத்துடன் கடைபிடித்து வருகிறோம். இவைகள் அனைத்தையும் தொடர்ந்துகொண்டே நமது சமூக ரீதியிலான எரிசக்தித் தேவைக்கு அணு சக்தி ஒத்துழைப்பை கூடுதலாக பெற்றுள்ளோம். இது வரவேற்கத்தக்கது. அமெரிக்காவிடம் இருந்து எரிபொருளையும், தொழில்நுட்பத்தையும் பெறுவது நமது அணுத் திட்டத்திற்கு எந்தவிதமான தடையையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில், நமது தேவைகள் அனைத்தையும் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் நிறைவேற்றுகிறது" என்று அனில் ககோட்கர் உறுதிபடக் கூறினார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்தத்தின் எந்தப் பிரிவும், இந்தியா இதற்குமேல் அணு ஆயுதச் சோதனை நடத்துவதை தடுக்கக்கூடியது அல்ல என்றும் அனில் ககோட்கர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தால், நமது அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுஆக்கம் செய்வதற்கு தடை ஏற்படுமே என்ற கேள்விக்கு பதிலளித்த அனில் ககோட்கர், அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பாக நாம் உருவாக்கிக் கொண்ட வழிமுறைகள் உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிய ககோட்கர், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிடம் இருந்து நாம் பெற்று பயன்படுத்தப் போகின்ற அணு எரிபொருளை பயன்படுத்தியதற்குப் பிறகு கிடைக்கும் கழிவை மறு ஆக்கம் செய்ய ஒப்புதல் தந்துள்ளது என்று கூறினார்.
"பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை மறு ஆக்கம் செய்தாக வேண்டும். அதனால் கூடுதலாக அணு மின் சக்தியை உருவாக்க பெரும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், அணுக் கழிவு தொடர்பான ஆபத்தை தவிர்க்கவும், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு ஆக்கம் செய்வது அவசியமாகிறது. எல்லாவிதமான எரிபொருளையும் நாம் மறு ஆக்கம் செய்தாக வேண்டும். இதற்கு அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது" என்று அனில் ககோட்கர் கூறினார்.
நாம், நமது எதிர்கால அவசியத்தின் அடிப்படையில் அணு ஆயுதச் சோதனை நடத்துவது இந்த ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்டது. அணு ஆயுதச் சோதனை நடத்தும் உரிமை மட்டுமின்றி, நாம் கடைபிடித்து வரும் சுய கட்டுப்பாடும் உள்ளது. நாம் எந்த இடத்திலும் பகற்கனவில் ஈடுபடத் தேவையில்லை. எல்லாவற்றையும் எதிர்காலம் முடிவு செய்யும். நமது எரிசக்தித் தேவையை நிவர்த்தி செய்துகொள்ள நாம் கடைபிடித்துவரும் உள்நாட்டுத் திட்டத்தின் ஒரு கூடுதல் அம்சமாகவே சர்வதேச அளவில் அணு சக்தி ஒத்துழைப்பிற்குச் சென்றுள்ளோம் என்று ககோட்கர் விளக்கினார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் நாம் அமைக்கக்கூடிய மற்றும் பிரித்தளித்துள்ள அணு மின் உலைகளின் ஆயுட்காலம் வரை அவைகளை இயக்கத் தேவையான அணு எரிபொருளை சேமித்து வைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது. 123 ஒப்பந்தம் ஒரு வழிப்பாதையல்ல. அணு தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான தடைகளை நீக்கும் பணிகளை நமக்காக அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளது. நம்முடைய அணு மின் நிலையங்களை கண்காணிப்பதற்கான சிறப்பு ஒப்பந்தம் ஒன்றையே செய்துகொள்ளப் போகின்றோம். எனவே நமது நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்று அனில் ககோட்கர் கூறினார்.