புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தின் காரணமாக வறட்சியும், வெள்ளமும் மாறி மாறி ஏற்பட்டு அதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு பஞ்சம் ஏற்படும் நிலையை இந்தியா சந்திக்கும் அபாயம் உள்ளது என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
ஐ.நா.வின் உணவு, வேளாண்மைக்கான அமைப்பு (FAO) வானிலை மாற்றத்தால் ஏற்படும் உற்பத்தி இழப்பு சற்றேறக்குறைய 18 விழுக்காடு அளவிற்கு இந்தியாவின் பருப்பு உள்ளிட்ட தானிய உற்பத்தியை பாதிக்கும் என்றும் ஒட்டு மொத்தமாக மொத்த உற்பத்தியில் 125 பில்லியன் டன் உற்பத்தி குறையும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
குறைந்த மழை பெய்வதால் அரை பாலையாய் உள்ள இந்தியாவின் நிலப்பகுதிகளில் இந்த உற்பத்தி பாதிப்பு ஏற்படும் என்று ஐ.நா. அமைப்பின் தலைமைச் செயலர் ஜாக் டையோஃப் எச்சரித்துள்ளார்.
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகளே வானிலை மாற்றத்தால் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உற்பத்தி குறையும் என்றும், மாறாக 40 முதல் 60 டிகிரிக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் வெப்பநிலை 1 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும், அதன் காரணமாக உணவு உற்பத்தி பெருகும் என்றும் டயோஃப் கூறியுள்ளார்.