பிரதமருக்கு எதிர்ப்பு : நாடாளுமன்றத்தில் அமளி, தள்ளிவைப்பு

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (12:02 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளித்த பிரதமர் தவறான தகவல் அளித்து அவையை அவமதித்துவிட்டார் என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய அமளியால் நாடாளுமன்ற அவைகள் இன்று காலை தள்ளிவைக்கப்பட்டது.

இன்று காலை மக்களவை கூடியதும் பேச எழுந்த பாஜக தலைவர் விஜயகுமார், தான் அளித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது விவாதிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு பதிலளித்த அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, கேள்வி நேரத்திற்குப் பிறகு அது எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்.

அதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அளித்த விளக்கம் அவையை தவறாக வழிநடத்திவிட்டது என்று கூறி தொடர்ந்து முழக்கமிட்டவாரே இருந்தனர்.

அவை உறுப்பினர்களை அமைதி காக்குமாறு சோம்நாத் சாட்டர்ஜி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் முழக்கம் தொடர்ந்தது. இதனால் கோபமுற்ற சோம்நாத் சாட்டர்ஜி, "உங்களுக்காக நான் வெட்கப்படுகின்றேன். உங்களுக்கு எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லை. அவையை நடத்த நீங்கள் ஒத்துழைக்க மறுக்கிறீர்கள்" என்று காட்டமாக கூறிவிட்டு, 11.30 வரை அவை நடவடிக்கைகளை தள்ளி வைப்பதாக அறிவித்தார்.

இதேப் போல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் அவை நடவடிக்கைகள் 12.00 மணி வரை தள்ளிவைக்கப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்