சுதந்திர தின விழா நிகழ்ச்சியி கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், ஆண்டுதோறும் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நாடு முழுவதும் நேற்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 21 குண்டுகள் முழங்க, பிரதமர் மன்மோகன்சிங் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், நாம் அனைவரும் இன்று 60-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். இந்த தருணத்தில், சுதந்திர போராட்ட வீரர்களின் மிகப்பெரும் தியாகத்தை நினைவில் கொள்வது அவசியம் என்றார்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் பெருமை மிக்கது நமது நாடு. எனவே சாதி, மதம் போன்ற காரணங்களால் இந்தியா பிளவு படுவதை அனுமதிக்க முடியாது. வறுமை, கல்வியின்மை, நோய் போன்றவற்றுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனால் அந்த போரில் நாம் வெற்றி பெற்றுவிட்டதாக கூறமுடியாது. எனினும், வறுமையை ஒழிப்பது சாத்தியமான இலக்காக உள்ளது. இதை உண்மையாக்க வேண்டுமெனில் பொருளாதார வளர்ச்சி அவசியம் என்றும் பிரதமர் கூறினார்.
நம்முடைய பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி காணுவதன் மூலமாக வறுமையை ஒழிக்க முடியும். சமூக திட்டங்களுக்கான அரசின் செலவு கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமான அளவு அதிகரித்து உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
கல்விக்கான ஒதுக்கீடு மூன்று மடங்காகவும் சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம் ஆகிய துறைகளுக்கு இரண்டு மடங்காகவும் ஒதுக்கீடு அதிகரித்து உள்ளது. நகரங்களோடு கிராமப்புறங்களை இணைக்கும் `பாரத் நிர்மாண்' திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன்மூலமாக கிராமங்களில் சாலைகள், மின்சாரம், தொலைபேசி போன்ற வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றார் பிரதமர்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. அரிசி மற்றும் கோதுமைக்கான ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. வரும் ஆண்டுகளில் விவசாய முன்னேற்றமே நமது முக்கிய இலக்காக இருக்கும். இதற்காக உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ரூ.25 ஆயிரம் கோடியில் சிறப்பு திட்டம் ஒன்று விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மன்மோகன் சிங் கூறினார்.
கடந்த 60 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியின் பலனை சில பகுதிகள் பெற்றுள்ளன. அடுத்த பத்து ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு பகுதியும் இந்த பலனை பெற வேண்டும். தொழில் மயம் என்பதன் பொருள் நகரமயமாக்கல் என்பதாகும். இதன் மூலமாக ஏராளமான மக்கள் நகரங்களில் வாழும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.
தற்போது நாட்டின் பல இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள `தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்', விரைவில் நாடு முழுவதும் அறிமுகமாகும். இதன் மூலமாக ஏழைக் குடிமகனுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் கண்டிப்பாக வேலை கிடைக்கும். நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் சிறிய கடைகளை வைத்துக் கொண்டு முறையான தொழில் இல்லாமல் அமைப்பு சாரா நிலையில் உள்ளனர். அவர்களின் நல வாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
ஏழை குடும்பங்களில் உள்ள மக்களால் அதிக செலவிலான மருத்துவ வசதியை பெற முடிவதில்லை. இதை கருத்தில் கொண்டு ஏழை மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு வசதி விரைவில் அறிமுகப் படுத்தப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமகனுக்கும் முதியோர் ஓய்வு ஊதியம் வழங்கப்படும் என்று கூறினார்.
நாட்டில் உள்ள மக்கள் கல்வியறிவு பெறாமல் எந்தவொரு நாடும் முன்னேற்றம் அடைய முடியாது. எனவே, நவீன கல்வி அளிப்பது அவசியம். நாடு முழுவதும் 6,000 தரமான பள்ளிகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர 1,600 தொழிற்கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இது தவிர 10 ஆயிரம் தொழில் பள்ளிகளும், 50 ஆயிரம் திறமை ஊக்குவிப்பு மையங்களும் உருவாக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்க அரசு உறுதி அளிக்கிறது. இது தற்போதைய நிலையை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும் என்றார்.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் இருப்பதே இந்தியாவின் விருப்பம். அது சிறிய நாடாக இருந்தாலும் சரி, பெரிய நாடாக இருந்தாலும் சரி. இதன் காரணமாக எல்லா வளர்ந்த நாடுகள் மற்றும் சக்தி வாய்ந்த நாடுகளுடனும் இந்தியா நட்புடன் இருக்கிறது. உலகம் வெப்பமாவது முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சினையில் இளைஞர்கள் முக்கிய கவனம் செலுத்தி சுற்றுச் சூழல் குறித்து தேசிய விழிப்புணர்வு இயக்கம் நடத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.