அயோத்தி்யில் தாக்குதல் நடத்திய ஜெய்ஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை

Webdunia

சனி, 11 ஆகஸ்ட் 2007 (13:10 IST)
2005ஆம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலத்தின் மீது நடந்த தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஸ்-ஈ-மொகம்மது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஜம்முவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

ஜம்மு நகரில் உள்ள ஜானிபூரா என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஜெய்ஸ்-ஈ-மொஹம்மது இயக்கத்தின் மண்டல தளபதியான சைஃபுல்லா காரி சுற்றிவளைக்கப்பட்டபோது டெல்லியில் இருந்து வந்த சிறப்பு காவலர் குழுவும் ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு பகுதி காவல் தலைமை ஆய்வாளர் எஸ்.பி. வாய்த் கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்த தீவிரவாதி மக்சூடா பேகம் என்பவரது வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக வாய்த் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலில் டெல்லி காவல்துறையின் துணை ஆய்வாளர் ஒருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனும் காயமுற்றனர். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மக்சூடா பேகம் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் இடித்து தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ராமர் கோயிலின் மீது கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி 6 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஆனால் அத்தாக்குதல் முறியடிக்கப்பட்டு 6 பேரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றியது ஜெய்ஸ்-ஈ-மொஹம்மது தலைவனான மசூத் அசாரும், இந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சைஃபுல்லா காரியும்தான் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்