குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடது சாரிகள் சார்பில் முகமது ஹமீத் அன்சாரியும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நஜ்மா ஹெப்துல்லாவும், 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ரசீத் மசூத்தும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் மொத்தம் 788 பேர் வாக்களிக்கின்றனர். இதில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் வாதி கட்சியையும் சேர்த்து மொத்தம் 425 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு காங்கிரஸ், இடது சாரிகள் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரிக்கு இருப்பதால் அவரது வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
பாராளுமன்றத்தில் உள்ள தனி அறையில் நடைபெறும் இந்த தேர்தலுக்கான வாக்குபதிவு, நாளை காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.