இட ஒதுக்கீடு : உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை!

Webdunia

திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (20:37 IST)
மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் அரசமைப்புச் சட்ட ரீதியாக செல்லத் தக்கதா என்பது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை துவங்குகிறது!

இந்தக் கல்வியாண்டில் இருந்தே 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் அடங்கிய அமர்வு கடந்த மார்ச் மாதம் அளித்த இடைக்காலத் தடையை விலக்கிக்கொள்ளக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே. தாக்கர், ஆர்.வி. ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு இம்மனுக்களை விசாரிக்கிறது.

சாதி ரீதியாக இட ஒதுக்கீடு செய்யும் இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாகவும் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் நாளை விசாரணை துவங்குகிறது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் இடங்களை அதிகரித்தே இட ஒதுக்கீடு செய்யப்படுவதால் இச்சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் நியாயமற்றது என்பது மத்திய அரசின் வாதமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்