பின் லேடனின் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் கய்டாவுடன் மருத்துவர் மொஹம்மது ஹனீஃபிற்கு தொடர்பு உள்ளதாக ஆஸ்ட்ரேலிய தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி ஆதாரமற்றது என்று ஹனீஃபின் வழக்கறிஞர் மறுத்துள்ளார்!
ஆஸ்ட்ரேலியாவின் எஸ்.பி.எஸ். சேனல் என்ற தொலைக்காட்சி, மொஹம்மது ஹனீஃபிற்கு அல் கய்டாவுடன் தொடர்பு இருப்பதாக இந்தியக் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
"மொஹம்மது ஹனீஃபிற்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பிருக்கலாம் என்றும், அல் கய்டாவுடன் தொடர்பு உள்ளது என்றும் தங்களது ரகசிய கோப்புகளில் இந்திய காவல்துறை (எது என்று குறிப்பிடாமல்) அந்த தொலைக்காட்சி செய்தி கூறியுள்ளது.
இந்த செய்தி குறித்து கருத்து கேட்டதற்கு, அவ்வாறு கூறுவதற்கான அடிப்படை ஆதாரம் எதையும் அந்தத் தொலைக்காட்சி கூறவில்லை. ஏதோ ஒரு கோப்பில் உள்ள உறுதி செய்யப்படாத ஒரு வரியை வைத்துக் கொண்டு அவ்வாறு கூறியுள்ளதாகவே தெரிகிறது. எப்படி, யாரிடமிருந்து உதவி பெற்றார் அல்லது உதவினார் என்கின்ற விவரங்கள் ஏதுமில்லை என்று வழக்கறிஞர் பீட்டர் ரஸ்ஸோ கூறியுள்ளார்.
ஹனீஃபை கைது செய்து விசாரித்த ஆஸ்ட்ரேலிய காவல்துறை அவருக்கு அப்படிப்பட்ட தொடர்புகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்றும், ஹனீஃப் எங்கு படித்தார் என்பதும், அந்தப் பள்ளி எப்படிப்பட்டது என்பது பற்றி மட்டுமே கேட்கப்பட்டதாக ரஸ்ஸோ கூறியுள்ளார்.