மும்பை தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்படவில்லை என்றாலும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் சஞ்சய் தத்திற்கு தொடர்பு இருந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கோடே தனது தீர்ப்பில் கூறியுள்ளார்!
சட்டத்திற்குப் புறம்பாக ஏ.கே.57 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாக மட்டுமே ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத், ஏற்கனவே 19 மாத காலம் சிறையில் இருந்ததால் அவர் விடுதலைச் செய்யப்படலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
சஞ்சய் தத்தின் உதவியாளராக இருந்த ருசி முல்லா, நன்னடத்தை விடுதலை அளிக்கப்படுகிறார் என்று நீதிபதி கோடே அறிவித்ததும் சஞ்சய் தத் தனக்கும் அப்படிப்பட்ட விடுதலை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்த்திருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், நீதிபதி கோடே 6 ஆண்டுக்காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை என்று தீர்ப்பளித்ததும் சஞ்சய் தத் அதிர்ச்சியடைந்தார்.
தான் சிறையில் இருந்த காலத்தில் நன்னடத்தை தொடர்பான அறிக்கை தனக்கு சாதகமாகவே இருக்கும் என்று சஞ்சய் தத் எதிர்பார்த்தார். ஆனால், சஞ்சய் தத்தின் நன்னடத்தை அறிக்கையை சிறைத்துறை அதிகாரிகளிடம் தான் கோரவில்லை என்று கூறிய நீதிபதி கோடே, சஞ்சய் தத் மும்பை தொடர் குண்டு வெடிப்பிற்கு முன்னரே அதில் தொடர்புடைய குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததும், துபாயில் தாவூத் இப்ராஹிம் கூட்டத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்ததும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அவரின் இத்தகைய நடவடிக்கைகள் நீண்டகாலமாக குற்றச் செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததையே காட்டுகிறது என்று நீதிபதி கூறினார்.
தனக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பை படித்து முடித்ததும் தன்னையும், ஆர்தர் சாலையில் உள்ள சிறைச் சாலையில் பாரட் எண் 10 சிறையில் தனது நண்பர் யூச·ப் நல்வாலாவுடன் அடைக்க வேண்டும் என்று சஞ்சய் தத் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவரை பார்த்து, நீங்கள் தவறிழைத்துவிட்டீர்கள், நடந்தது நடந்துவிட்டது. உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்கள் துறையில் நீங்கள் முன்னிலையில் உள்ளீர்கள், இந்த நிலை தற்காலிகமானதுதான். எனது எல்லையைத் தாண்டி உங்களை விடுவிக்க இயலாது என்று நீதிபதி கோடே கூறியுள்ளார்.
தீர்ப்பிற்குப் பிறகு நீதிமன்றத்தின் பதிவாளர் அறைக்கு கொண்டு செல்லப்பட்ட சஞ்சய் தத், பிறகு அங்கிருந்து ஆர்தர் சாலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களை வைத்திருந்ததைக் காட்டிலும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் ஆட்களுடன் அவர் வைத்திருந்த தொடர்பே 6 ஆண்டுக்கால சிறைத் தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளது.