தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. போட்டியின் போது மாடுகள் சித்ரவதை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறபித்துள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த முனியசாமி என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பல்வேறு தரப்பினர் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தீர்ப்பளித்தது.
இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்பிற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு, சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீசு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.