100 கோடி இதயங்களை இணைப்பதே எனது குறிக்கோள் : அப்துல் கலாம்!

Webdunia

செவ்வாய், 24 ஜூலை 2007 (21:16 IST)
நமது நாட்டில் வாழும் 100 கோடி இதயங்களையும், மனங்களையும் இணைப்பதே எனது வாழ்க்கையின் குறிக்கோள் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது இறுதி உரையில் கூறியுள்ளார்!

குடியரசுத் தலைவர் பதவியில் ஐந்தாண்டுக் காலம் நீடித்து மக்களின் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த அப்துல் கலாம், இந்த ஐந்தாண்டுக் காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் தான் முழுமையாக மகிழ்ச்சியுடன் கழித்தேன் என்று கூறினார்.

நிகழ்வுகள் நிறைந்த 5 ஆண்டுகள் என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய அப்துல் கலாம், அரசியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலை, இலக்கியம், வணிகம், நீதித்துறை, நிர்வாகம், விவசாயம், சிறுவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், செய்தியாளர்கள் என்று நமது நாட்டின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து அவர்களோடு நெருக்கமாக உறவாடியதன் மூலம் குடியரசுத் தலைவராக இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாகக் கழித்தேன் என்றும், இளைஞர்களும், மாணவர்களுமே நமது நாட்டின் எதிர்காலச் செல்வங்கள் என்று கூறினார்.

உலகத்தின் மிக உயர்ந்த போர்முனை என்று கருதப்படும் சியாச்சின் பனி மலைக்கு சென்றதும், நமது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்ததும், இந்தியாவை 2020 ஆம் ஆண்டிற்குள் முன்னேறிய நாடாக மாற்ற சென்ற இடமெல்லாம் அதனை மக்களுக்குக் கூறியதையும் நினைவுகூர்ந்த கலாம், நமது நாட்டின் கிராமப்புறத்திற்கும் நகர்ப்புறத்திற்கும் உள்ள வேறுபாட்டை களையவும், கல்வி, சமூக நலன், தொடர்பு ஆகியவற்றில் மேம்பாடடைய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட இந்திய சமூகத்தின் 100 கோடி மக்களின் இதயங்களையும், மனங்களையும் இணைப்பதே தனது வாழ்க்கைக் குறிக்கோள் என்று கூறிய அப்துல் கலாம், அதனை நிறைவேற்றிட நாம் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவை 2020க்குள் ஒரு முன்னேறிய நாடாக மாற்றும் மாபெரும் குறிக்கோளை எட்ட குடிமக்களே உங்களோடு நான் எப்பொழுதும் இருப்பேன். இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும். ஜெய்ஹிந்த் என்று கூறி தனது உரையை முடித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்