குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி உறுதி!

Webdunia

செவ்வாய், 24 ஜூலை 2007 (19:24 IST)
ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மொஹம்மது ஹமீத், நஜ்மா ஹெப்துல்லா, ரஷீத் மசூத் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுவிட்டதால் மும்முனைப் போட்டி உறுதியாகிவிட்டது!

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 788 பேர் வாக்களக்கும் இத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 33 பேரில் 30 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.

ஆளும் ஐக்கிய முற்போக்கு, இடதுசாரி கூட்டணிகளின் வேட்பாளர் மொஹம்மது அன்சாரி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா, 3ம் அணியில் உள்ள சமாஜ்வாடி கட்சியின் ரஷீத் மசூத் ஆகியோரின் மனுக்கள் மட்டுமே இன்றைய பரிசீலனையில் ஏற்கப்பட்டுள்ளதாக குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அதிகாரியும், மாநிலங்களவை தலைமைப் பொதுச் செயலருமான யோகேந்திர நாராயண் அறிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் வியாழக்கிழமை ஆகும். போட்டியிடும் இவர்களில் மூவரில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிகளின் ஆதரவு வேட்பாளர் மொஹம்மது ஹமீத் அன்சாரிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவும் உள்ளதால் நாடாளுமன்றத்தின் 788 உறுப்பினர்களில் 425 பேரின் ஆதரவு உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவிற்கு 240 உறுப்பினர்களின் உறுதியான ஆதரவு உள்ளது. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவ சேனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் முடிவுகள் தெரியவில்லை. 3ம் அணியின் வேட்பாளர் ரஷீத் மசூதிற்கு 81 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

எனவே, ஆளும் கூட்டணியின் வேட்பாளர் அன்சாரியின் வெற்றி உறுதியானது என்றே தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்