குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர் கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் வாக்களித்தனர்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் வருகிற 24 ஆம் தேதியுடன் முடிவடைவதையொட்டி புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரி கட்சிகள் சார்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் பிரதீபா பாட்டீலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவுடன் பைரோன் சிங் ஷெகாவத் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மாநில தலைநகரங்களில் உள்ள சட்டசபை வளாகத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக சென்னையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர் கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் பிரணாப் முகார்ஜி, பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் வாக்களித்தனர்.