மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கி மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கில் 100 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் அறிவித்து அவர்களுக்கு படிப்படியாக தண்டனை வழங்கி வருகிறது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அப்துல் கனி இஸ்மாயில் துர்க், பர்வேஷ் ஷைக், முகமது முஸ்டாக் தரனி ஆகிய மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கி தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோடே இன்று தீர்ப்பளித்தார். இவர்கள் மூவரும் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து பலர் உயிரிழக்க காரணமாக இருந்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தனது தீர்ப்பில் கோடே கூறியிருந்தார்.
அப்துல் கனி இஸ்மாயில் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனுடன் சேர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வொர்லி சந்தையில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வெடிக்கச் செய்ததில் பலர் கொல்லப்பட்டனர். பர்வேஷ் ஷைக் தெற்கு மும்பையில் உள்ள சந்தை ஒன்றில் வெடி குண்டுகள் நிரப்பிய இரு சக்கர வாகனத்தை வெடிக்கச் செய்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல் தெற்கு மும்பையில் உணவு விடுதியில் வெடி குண்டு வைத்ததற்காக முகமது முஸ்டாக்கிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதி கோடே தெரிவித்தார். மும்பை தொடர் குண்டு வழக்கில் மரண தண்டனை அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 100 பேரில் இதுவரை 81 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.