27 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்கு: 31 ஆம் தேதி தள்ளிவைப்பு

Webdunia

செவ்வாய், 17 ஜூலை 2007 (13:33 IST)
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோறும் மத்திய அரசின் மனு மீதான விசாரணையை வருகிற 31 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான.ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி. ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 2007 - 08 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உததரவிடப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளை கொண்ட குழு இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்கக் கோரி மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோபாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிபதி குழு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை வருகிற 31 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்